close
முகப்புசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

October 13, 2017 161Views
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா இல்லையா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவை தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தி வைத்தது. முன்னதாக, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் புனிதத்தன்மையை பராமரிக்க முடியாது என்ற காரணத்தால் அவர்களை கோயிலில் அனுமதிப்பதில்லை என்று ஐயப்பன் கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், கேரள மாநிலத்திலேயே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால், பொது நல மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மத வழிபாட்டில் ஆண், பெண் என பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சம உரிமைக்கு எதிரானது என்று வாதிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கை  அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 நீதிபதிகள்கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.