close
முகப்புதுணைப்பயிற்சியாளராக டிராவிட், ஜாகிர் கான் நியமனம் அல்ல, குழப்பும் பிசிசிஐ

துணைப்பயிற்சியாளராக டிராவிட், ஜாகிர் கான் நியமனம் அல்ல, குழப்பும் பிசிசிஐ

July 17, 2017 85Views
துணைப்பயிற்சியாளராக டிராவிட், ஜாகிர் கான் நியமனம் அல்ல, குழப்பும் பிசிசிஐ

இந்திய அணியின் துணைப்பயிற்சியாளராக டிராவிட் மற்றும் ஜாகீர் கான் ஆகியோரை பரிந்துரை மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது என்றும், நியமிக்கப்படவில்லை என்றும் பிசிசிஐ நிர்வாக குழு கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்தது. இதனை அடுத்து, அவரையே வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால், கேப்டன் கோலி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறினார்.

இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு ஆராய்ந்து ரவி சாஸ்திரி, சேவாக், ராஜ்புட், டாம் மூடி உள்பட 5 பேரிடம் நேர்காணல் நடத்தியது. இறுதியாக ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு தெரிவித்தது. இதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட பிசிசிஐயின் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்தது.

அதேபோல், ரவி சாஸ்திரிக்கு துணை பயிற்சியாளர் என்ற வகையில் ஜாகீர் கான் பவுலிங் ஆலோசகராகவும், டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. ஆனால், இதில் ரவி சாஸ்திரிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழுவால் துணைப்பயிற்சியாளராக டிராவிட் மற்றும் ஜாகிர்கான் பெயர்கள் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அதற்கு நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும். தற்போது வரை ஜாகீர் கான் மற்றும் டிராவிட்டை ஆலோசகராக பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. நியமனம் செய்யப்படவில்லை. இதற்கிடையே, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை செய்த பின்னர்தான், துணை பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. இதனால், ஜாகீன் கான், டிராவிட் நியமனத்தில் குழப்பம் நிலவி வருகிறது.