close
முகப்புமுல்லை பெரியாறு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லை பெரியாறு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

July 15, 2017 138Views
முல்லை பெரியாறு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முல்லை பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள போலீசார் தடுத்து நிறுத்துவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவில், முல்லை பெரியாறு பகுதியில் தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தடையின்றி சென்று வர அனுமதிக்குமாறு கேரள அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவின் மீதான பதில் மனுவை கேரள அரசு சென்ற வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எதிர்பதில் மனு தாக்கல் செய்ய 3 வாரம் கால அவகாசம் கேட்டு கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு 3 வாரகால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.