close
முகப்பு குரங்கணி தீ விபத்து: சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம்

குரங்கணி தீ விபத்து: சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம்

 குரங்கணி தீ விபத்து: சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம்

குரங்கணி மலைப்பகுதியில் சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 36 பேர் ட்ரெக்கிங் சென்ற போது ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, சென்னை ட்ரெக்கிங் கிளப் தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

”இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது. குரங்கணி மலை ட்ரெக்கிங் பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டது. திவ்யா, நிஷா ஆகிய இருவரும் தான் இதன் ஒருங்கினைப்பாளர்கள். மேலும், இவர்களுடன் சென்ற அருண், விபின் ஆகியோர் 7 வருட ட்ரெக்கிங் அனுபவம் உள்ளவர்கள். இவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி ஒருவரும் சென்றார். குரங்கணி மலையேற்றத்திக்கு நுழைவுச் சீட்டு பெற்றுவிட்டு தான் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.  

சனிக்கிழமை இவர்கள் ட்ரெக்கிங்-ஐ தொடங்கியபோது தீ-க்கான எந்த அறிகுறியும் இல்லை. ஞாயிறு அன்று வெளியே வருதற்காக திரும்பிக்கொண்டிருக்கும் போது பாதி வழியில் இந்த தீயில் மாட்டிக்கொண்டுள்ளனர். 

மலையின் அடிவாரத்தில் விவசாயிகள்  தீ வைத்திருந்தனர் என்றும், எதிர்பாராதவிதமாக போடி பள்ளத்தாக்குப் பகுதியில் பலத்த காற்றுவீசியதால், மலையின் அடிவாரத்திலிருந்து தீ மளமளவென காட்டுக்குள் பரவியது. இது ட்ரெக்கிங் குழுவினர் பயணித்த எதிர் திசையில் இருந்து வந்ததால் தப்ப முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு மதியம் உள்ளூர் வழிகாட்டியை தொடர்பு கொண்ட போது அவர் ட்ரெக்கிங் குழுவினர் உள்ள சரியான இடத்தை எங்களுக்கு அனுப்பினார். இதனை உடனடியாக வனத்துறைக்கு அனுப்பி அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். ட்ரெக்கிங் கிளப் மூலமாக அவர்களுக்கு உதவ ஒரு குழுவை தேனிக்கு அனுப்பி வைத்தோம். மேலும், பல ஆண்டுகள் அனுபவமுள்ள பயிற்சியாளர்களாலே இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

இந்த ட்ரெக்கிங்-ஐ ஒருங்கிணைத்த திவ்யா தன் உயிரை பணயம் வைத்து மூன்று பேரை காப்பாற்றியுள்ளார். மேலும் பலரை காப்பாற்ற சென்ற அவர் திரும்பவில்லை, உயிரிந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. ”

சென்னை ட்ரெக்கிங் கிளப் முகநூல் பக்கத்தில் இந்த பதிவு செய்யப்பட்ட பின் பலரும் #StandWithCTC என தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். கமெண்ட் பகுதியில் பலரும் சென்னை ட்ரெக்கிங்க் கிளப்பிற்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.